19/10/10

தில்லியில் அன்பின் அபிநயம்....

சென்ற நூற்றாண்டில் பிறந்து, அடுத்து வரும் நூற்றாண்டுக்கான அறிவியலுடன் கூடிய ஆன்மீகச் சிந்தனைகளைத் தொலைநோக்குடன் வழங்கி விட்டுப் போன பெருமகனார் வேதாத்திரி மகரிஷி .
வாழ்க்கை நெறியே யோகம் என்பதே மகரிஷி வகுத்த சித்தாந்தம்.
அன்றாடங் காய்ச்சிகளுக்கும், சமூக மட்டத்தில் மிகச் சாமானியவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கும், தவம்... தியானம் ஆகியவற்றில் புறக்கணிப்புக்கு ஆளாகி ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்ணினத்துக்கும் எட்ட முடியாத தொடுவானமாக இருந்த தவயோகத்தின் வாயில்களை அனைத்துத் தரப்பினருக்கும் விரியத் திறந்து வைத்திருப்பதே மகரிஷியின் எளிய முறைக் குண்டலினி யோக மனவளக் கலையின் தனிச் சிறப்பு.

மதம், மொழி, சாதி, இனம் ஆகிய குறுகிய எல்லைக் கோடுகளையும், அவை உண்டாக்கி வைத்திருக்கும் புற அடையாளங்களையும் தகர்த்தபடி அறிவு ஒன்றையே தெய்வமாக்கி அறிவுக்காகவே திருக்கோயில் அமைத்து அறிவை மட்டுமே ஆராதிக்கிறது வேதாத்திரியம்.

வேதங்கள் உபநிடதங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கரை தேர்ந்த ஆன்மீக குருமார்கள் அவை குறித்த வியாக்கியானங்களையும், விளக்கங்களையும் தங்கள் சீடர்களுக்கு அளிப்பதே பொதுவான நடப்பியலில் காணக் கூடியது. ஆனால்.... மூன்றாம் வகுப்பைக் கூட முழுவதும் முடிக்க இயலாத வேதாத்திரி மகரிஷி அவர்கள் ,மேற்குறித்த அனைத்து வேத, உபநிடத சாரங்களையும் தனது உள்ளறிவின் வழிகாட்டுதலால் மட்டுமே தானாகவே கண்டடைந்திருக்கிறார் என்பதே மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.(நன்றி;வடக்கு வாசல் செப்.2010)

இந்நூற்றாண்டு கண்ட மாமுனியும்,அக இருள்களான ஆசை..கோபம்..களவு..காமம் ஆகியவை மண்டிக் கிடக்கும் மனித உள்ளங்களில் , அறிவாகிய ஞான விளக்கை ஏற்றி வைத்து மனித குலத்தை உய்விக்க , வாராது வந்த மாமணியாய் வந்துதித்த மகான்
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷிகளின் நூற்றாண்டு விழா 
தில்லி தமிழ்ச்சங்கத்தில் நிகழும் அக்டோபர் திங்கள் 24 ஆம் நாள் ஞாயிறன்று மாலையில் மிகச் சிறப்பாக நிகழவிருக்கிறது.

சான்றோர்களின் செறிவான சொற்பொழிவுகளோடு நில்லாமல்,மகரிஷியின் வாழ்வைச் சித்தரிக்கும் வகையில் திருச்சி கலைக்காவிரி மாணவர்கள் வழங்கும் ‘அன்பின் அபிநயங்கள்’என்னும் நாட்டிய நாடகமும் உடன் நிகழவிருக்கிறது.
அண்மையில் தமிழகமுதல்வர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்ற மகரிஷி நூற்றாண்டு விழா,மற்றும் அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் அரங்கேறி அனைவராலும் பரவலான பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது இந் நடன நிகழ்வு.
அன்பையும் கருணையையுமே தனது வாழ்நாள் முழுவதும் போதித்து வந்த தவச்செல்வரின் வாழ்வு ‘அன்பின் அபிநயங்களாக’மேடையேறுவதைக் காணும் அரிய வாய்ப்பு தில்லி வாழ் பெருமக்களுக்குக் கிட்டியிருக்கிறது.
வேதாத்திரிய வழிகளை அறிமுகம் செய்து கொண்டு..
மகிழ்ச்சி-இன்பம்-பேரின்பம்
அடையவும்,
மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றுச் சித்திரமான
அன்பின் அபிநயங்க’ளைக்
கண்டு களிக்கவும்
விழாவுக்கு வருகை புரிந்து சிறப்பிக்க அனைத்துப் பொது மக்களையும் இரு கரம் கூப்பி வாழ்த்தி வணங்கி வரவேற்கிறார்கள்...
தில்லி மன வளக் கலை ஆர்வலர்கள்.

23/9/10

தில்லி மன்றத்தில் மகரிஷி நூற்றாண்டு



சென்ற நூற்றாண்டில் பிறந்து , அடுத்து வரும் நூற்றாண்டுக்கான அறிவியலுடன் கூடிய ஆன்மீகச் சிந்தனைகளைத் தொலைநோக்குடன் வழங்கிவிட்டுப் போன பெருமகனார் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு ஆகஸ்டு 14ஆம் நாளில் தொடங்கியிருக்கிறது.

வாழ்க்கை நெறியே யோகம் என்பதே மகரிஷி வகுத்த சித்தாந்தம்..
தனி மனிதனை முன்னிறுத்தி அவனை மட்டுமே கரை சேர்க்கும் ஆன்மீகமல்ல வேதாத்திரியம்.
தனி மனிதனைச் செழுமைப்படுத்தி அதன் வழி மண் பயனுறச் செய்வதே அதன்  இலக்கு.
 ’’தொழில்களையே கடமையெனத் தேர்ந்து செய்து
    மாயமெனும் மறைபொருளாம் அறிவறிந்து
    மண்ணுலகில் உயிர்கட்குத் துன்பம் நீக்க
    நேயமுடன் தொண்டாற்றி இன்பம் துய்க்கும்
    நிறை வாழ்வாம் நெறியதுவே யோகமாம்’
என்ற மகரிஷியின் பாடல்
 ‘ஊருக்குழைத்திடல் யோகம்’என்ற மகாகவியின் வரிகளையே நினைவூட்டுகிறது. 

வேதாத்திரியத்தின் யோக வழிகாட்டுதல்கள் படிப்பாளிகளுக்கும்,பணம் படைத்தவர்களுக்கும் மட்டுமானவை அல்ல.
‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’என்ற காந்தீயப் பாதையே வேதாத்திரியத்தின் பாதை.
அன்றாடங்காய்ச்சிகளுக்கும்,சமூக மட்டத்தில் மிகச் சாமானியமானவர்களெனக் கருதப்படுபவர்களுக்கும்,தவம்...தியானம் ஆகியவற்றில் புறக்கணிப்புக்கு ஆளாகி ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்ணினத்துக்கும் அதுநாள் வரை எட்ட முடியாத தொடுவானமாக இருந்த  ‘யோக’த்தின் வாயில்களை அனைத்துத் தரப்பினருக்கும் விரியத் திறந்து வைத்திருப்பதே மகரிஷியின் எளிய முறைக் குண்டலினி யோக மன வளக்கலையின் தனிச் சிறப்பு.

.மதம்,மொழி,சாதி,இனம் ஆகிய குறுகிய எல்லைக் கோடுகளையும் , அவை உண்டாக்கி வைத்திருக்கும் புற அடையாளங்களையும் தகர்த்தபடி அறிவு ஒன்றையே தெய்வமாக்கி அறிவுக்காகவே திருக் கோயில் அமைத்து அறிவை மட்டுமே ஆராதிக்கிறது வேதாத்திரியம்.

வானியல்,புவியியல்,உடலியல் ஆகிய விஞ்ஞானக் கோட்பாடுகளை உள்வாங்கி அவற்றோடு முரண்படாத வகையில் தன் உள்ளுணர்வால்கண்டுணர்ந்த இறை உணர்வையும் ஒருங்கிணைத்துத் தெளிவான வாதங்களோடு முன் வைக்கும் வேதாத்திரி மகரிஷிகளை ஓர் இறை விஞ்ஞானி என்று குறிப்பிடுவது கூடப் பொருத்தமானதுதான். 

வேதங்கள் உபநிஷதங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கரை தேர்ந்த ஆன்மீக குருமார்கள் அவை குறித்த வியாக்கியானங்களையும்,விளக்கங்களையும்
தங்கள் சீடர்களுக்கு அளிப்பதே பொதுவான நடப்பியலில் காணக் கூடியது.
ஆனால்....மூன்றாம் வகுப்பைக் கூட முழுவதும் முடிக்க இயலாத வேதாத்திரி மகரிஷி அவர்கள் மேற்குறித்த அனைத்து வேத,உபநிடத சாரங்களையும் தனது உள்ளறிவின் வழிகாட்டுதலால் மட்டுமே தானாகவே கண்டடைந்திருக்கிறார் என்பதே மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது. 

வேதாத்திரி மகானின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களும்,அஞ்சல் தலை வெளியீடு ஆகியனவும் தமிழக முதல்வர் தலைமையில் நடந்து கொண்டிருந்த அதே வேளையில் -  மகரிஷி தன் நேரடிப் பார்வையில் உருவாக்கிவிட்டுப் போயிருக்கும் உலக சமுதாய சேவைஅமைப்பின் தில்லி மண்டலக் கிளை உறுப்பினர்கள் மிக அமைதியான முறையில் சிறியதொரு விழா எடுத்து அப் பெருமகனை நினைவு கூர்ந்தனர்.
மகரிஷியின் அரிய புகைப்படங்கள் , உரைகள் ,வாழ்த்துக்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு திரையிடப்பட்டபோது காலச் சக்கரத்தில் ஏறி அவர் வாழ்ந்த காலத்திலேயே சற்று நேரம் சஞ்சரித்துவிட்டு வந்த உணர்வு பார்வையாளர்களுக்குள் கிளர்ந்தது.
ஆழியாறில் அம் மகானுடன் நெருங்கிப் பழகித் தற்போது தில்லி மண்டலத்தில் சேவையைத் தொடரும் மூத்த பேராசிரியர்கள் ,ஸ்வாமிஜி தொடர்பான அரிதான பல நிகழ்வுகளையும்,அவரது அன்றாடச் செயல்பாடுகளையும் மன நெகிழ்வோடு கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர்.
மன வளக்கலை உறுப்பினர்களும் வேதாத்திரியக் கல்வித் திட்டத்தில் பாரதியார் பல்கலை மூலம் பயிலும் முதுகலை மாணவர்களும் வேதாத்திரியக் கல்வியால் விளைந்த நலன்களை அவரவர் வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் அவையில் முன் வைக்க 
மகரிஷியின் உலக நல வாழ்த்துப் பாடலுடன் விழா இனிதே நிறைவுற்றது 

20/9/10

அமெரிக்க மண்ணில் மனவளக் கலை...

வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவியுள்ள உலக சமுதாய சேவா சங்கத்தின் தில்லி மண்டல இயக்குநர் அருள்நிதி திரு.ஜி.பாலச்சந்திரன் அவர்கள் வட அமெரிக்காவில் நிகழும் ‘எளிய குண்டலினி யோகம்’ குறித்த கருத்தரங்கிற்காக வருகை புரிந்துள்ளார்.
கருத்தரங்கில் பங்கேற்றபின் அமெரிக்காவின் கீழ்க் காணும் இடங்களில்- குறிப்பிட்ட தேதிகளில் மகரிஷியின் மன வளக் கலைப் பயிற்சிகளை அளித்து விரிவுரை ஆற்ற இருக்கிறார்.
ஆர்வமுள்ள அமெரிக்க அன்பர்கள் மகரிஷியின் மன வளக் கலை பயின்று வாழ்வில் வளமையும், சிந்தையில் இனிமையும் பெற்றுப் பல்லாண்டு ‘வாழ்க வளமுடன்’எனத் தில்லி மண்டலக் கிளை இதன் வழி அழைப்பு விடுக்கிறது.


திரு பாலச் சந்திரன் அவர்களின் பயணத் திட்டமும் பயிற்சி அட்டவணையும்;
North America Program - 2010
May the whole world enjoy Prosperity, Happiness and Peace
Day Date Place Program Contact
Person

1 14-Sep Tue Delhi Departure:
14-Sep Tue Fremont Arriving SFO 12:50                                      
2 15-Sep Wed
3 16-Sep Thu
4 17-Sep Fri
5 18-Sep Sat San Fransico NA SKY Conference Murali
6 19-Sep Sun San Fransico NA SKY Conference
7 20-Sep Mon
8 21-Sep Tue
9 22-Sep Wed
10 23-Sep Thu
11 24-Sep Fri
12 25-Sep Sat Fremont Introspection Level 4 Murali
13 26-Sep Sun Fremont Introspection Level 4
14 27-Sep Mon
15 28-Sep Tue
16 29-Sep Wed
17 30-Sep Thu
18 1-Oct Fri
19 2-Oct Sat Fremont BG MC Murali
20 3-Oct Sun Fremont BG MC
21 4-Oct Mon
22 5-Oct Tue
23 6-Oct Wed
24 7-Oct Thu
25 8-Oct Fri
26 9-Oct Sat Fremont BG MC Murali
27 10-Oct Sun Fremont BG MC
28 11-Oct Mon
29 12-Oct Tue SFO-SNA Leave for Tustin Gopal
30 13-Oct Wed Tustin, Orange County Introspection Level - 1
31 14-Oct Thu Introspection Level - 1
32 15-Oct Fri Introspection Level - 1
33 16-Oct Sat HEC
34 17-Oct Sun HEC
35 18-Oct Mon Introspection Level - 1
36 19-Oct Tue SNA-SFO Leave for Fremont
37 20-Oct Wed San Rafael, CA Science & Non-duality Conference
38 21-Oct Thu
39 22-Oct Fri
40 23-Oct Sat
41 24-Oct Sun
42 25-Oct Mon
43 26-Oct Tue SFO-Denver Leave for Denver Sriram
44 27-Oct Wed
45 28-Oct Thu
46 29-Oct Fri
47 30-Oct Sat Denver HEC
48 31-Oct Sun Denver HEC
49 1-Nov Mon DEN-Philadelphia Leave for Philadelphia Mathew
50 2-Nov Tue
51 3-Nov Wed
52 4-Nov Thu
53 5-Nov Fri PHL - New Jersey By road
54 6-Nov Sat NJ Higher level Courses Shan
55 7-Nov Sun NJ Higher level Courses
56 8-Nov Mon
57 9-Nov Tue
58 10-Nov Wed
59 11-Nov Thu NJ - Akron, Ohio Leave for Ohio Natraj
60 12-Nov Fri
61 13-Nov Sat Copley, Ohio HEC
62 14-Nov Sun Copley, Ohio HEC

3/9/10

மனைவி நல வேட்பு நாள்



சமய ஆன்மீகத் துறைகளில் சம உரிமை அளிக்காமல் பெண்ணை  ஒதுக்கியே வைத்திருந்த போக்குகளுக்கு மாறாகத் தவத்தில் - அதிலும் குறிப்பாகக் குண்டலினி யோகத்திலும் கூடப் பங்கேற்றுச் சிறப்பாக ஆன்மீகத் துறையில் அவள் தன் பங்கைச் செலுத்த முடியும் என்று காட்டியவர் வேதாத்திரிய மாமுனி.


பெண்ணின் சம உரிமை குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள், புரட்சிகரமான புதுமை நோக்குடன் அமைந்திருப்பவை.




‘’இந்த மதச் சட்டங்களையும், அரசியல் சட்டங்களையும் எழுதியவர்கள் ஆண்கள்தானே ? நீதி பிறக்க வேண்டுமென்றால் பெண்கள் எல்லோரும் ஒன்று கூடி மதச் சட்டங்களையும்,அரசியல் சட்டங்களையுமெழுத வேண்டும் . அதற்கான காலம் வந்து விட்டது’’
என்று மேலை நாடுகளிலும் கூட முழங்கியவர் அம் மகான்


‘’பெண்வயிற்றுருவாகிப்
   பெண் பாலுண்டே வளர்ந்தாய்
   பெண் துணையால் வாழ்கின்றாய்
   பெண்ணின் பெருமையை உணர்’’
எனத் தமது கவிதையில் சுட்டியதோடு நின்று விடாமல் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு மாதம் 31 ஆம் நாளன்று மனைவி நல வேட்பு நாளாக அனுசரிக்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார் மகரிஷி.

29/8/10

யோகம் - ஒரு வாழ்நெறி



’’ஊருக்கு உழைத்திடல் யோகம்’’ - இது பாரதி வாக்கு.
எந்த ஒரு நல்ல செயலை மனம் ஒன்றிப்போய் - ஊன் கலந்து - உயிர் கலந்து செய்தாலும் அது யோகமே.
வீட்டுப் பணிகள்,அலுவலகக் கடமைகள்,சமுதாயத்தோடு கொள்ளும் உறவுகள் என எல்லாவற்றுக்குமே இது பொருந்தும்


யோகம் என்ற சொல்லுக்கு இணைதல்,ஒன்றுபடுதல்,பதங்கமாதல்,அதுவேயாதல் என்ற பொருள்கள் சொல்லப்படுகின்றன.
‘இன்று எனக்கு நல்ல யோகம்தான்’ என்று கூறும்போதும் கூட ,நாம் விரும்பிய ஏதோ ஒன்று நமக்குக் கிடைத்திருப்பதால் அது நம்மோடு இணைந்து விட்டதாகவே கொள்ள முடியும்;எனவே அங்கும் இப் பொருள் பொருத்தமுடையதாகவே அமைந்திருக்கிறது

22/8/10

நூற்றாண்டு விழா நிகழ்வு நேரடித் தொகுப்பு

சென்னையில் ஆக.14 ஆம் நாளன்று நிகழ்ந்த வேதாத்திரி மகானின் நூற்றாண்டு விழா நிகழ்வுகளையும்,அவரது வாழ்க்கை,மற்றும்ஆழியாறில் உள்ள அறிவுத் திருக்கோயிலின் செயல்பாடுகளையும் விஜய் தொலைக்காட்சி ஆக்.15 அன்று ஒளிபரப்பியது.
அதைக் காணத் தவறியவர்களுக்காக....







12/8/10

மகரிஷி நூற்றாண்டு





வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 

என்னும் மந்திர வாசகத்தை....
அருளியவரும்,எண்ணம் , சொல் ,செயலால் எவருக்கும் தீங்கு செய்யாத பெருவழியைக் காட்டி விட்டுப் போனவருமான பெருமகனார் வேதாத்திரி மகரிஷி அவர்களின்  நூற்றாண்டு விழா ஆகஸ்டு14ஆம் நாள் தொடங்கவிருக்கிறது.
நாடு,மதம்,மொழி,இனம் ஆகிய குறுகிய எல்லைக் கோடுகள் அனைத்தையும் கடந்த மாபெரும் தவச் செல்வர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் . தனி மனிதன் மட்டும் உய்வு பெறுவதற்கான ஆன்மீகமல்ல வேதாத்திரி மகரிஷிகளின் ஆன்மீகம்.

தனிமனிதனோடு இயற்கையையும்,சமூகத்தையும் ஒருங்கிணைத்து 

அவற்றின் ஒத்திசைவில் விளையும் ஒருமைப்பாட்டை யோகமாகக் காணும் வழியே வேதாத்திரியம் காட்டும் வழி.
மைய அரசு , மகரிஷியின் நினைவாகச் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு இந்த மண்ணின் மைந்தருக்குப் பெருமை சேர்க்க முன் வந்திருக்கிறது
விழா நிகழ்வுகளில் பங்கு பெறுவதோடு மகரிஷி கனவு கண்ட போரில்லா நல்லுலகத்தை நனவாக்க உறுதி பூணுவதே அம் மகானின் நினைவுக்கு நாம் ஆற்றும் கைம்மாறாக இருக்க இயலும்.


31/3/10

அறிவே ஆலயம்,வாய்மையே வழிபாடு

வேதாத்திரியம் குறித்த சென்ற பதிவைப் படித்த ஓர் அன்பர், இவ்வளவு சிறப்புடைய பெருமகனின் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் போலிருக்கிறது என்று எழுத,அதற்கு,
//அப் பெருமகன்,தன்னைத் தெய்வமாக எவர் வழிபடுவதையும் எப்பொழுதும் விரும்பியதில்லை;அவருக்குக் கோயிலும் இல்லை.
மனித அறிவு கூர் தீட்டப்படுவதற்காக அவரது சிந்தனையில் உதித்த அறிவுத் திருக்கோயில்,பொள்ளாச்சி அருகிலுள்ள ஆழியாறில் உள்ளது.
அறிவை அகண்டமாக்கி விசாலப் பார்வையால் வையத்தை விரிவு செய்வதே அம் மகானுக்குச் செய்யும் மெய்யான வழிபாடாக இருக்கும்.//
என்ற பதிலை நான் அளித்திருந்தேன்.
 
அந்தப் பதிலுக்குப் பின்னூட்டமாகப் பெயரில்லாத யாரோ ஒரு அன்பரிடமிருந்து  வந்துள்ள அஞ்சல் , சில அடிப்படையான கேள்விகளை முன் வைத்திருப்பதால் அதைப் பின்னூட்டமாக வெளியிடாமல் தனிப் பதிவிலேயே வெளியிட்டு அவருக்குப் பதிலளிக்க விருப்பம். 
அதை எழுதியதில் அவரது நோக்கம் என்னவாக இருந்தாலும்-அதனால்  சில விளக்கங்கள் பலருக்கும் போய்ச் சேர அவரது கடிதம் மறைமுகமாக உதவியிருக்கிறது.
தீமையில் விளையும் நன்மை என்பது..இதுதான்.


முதலில் வாசகர்களின் பார்வைக்கு அந்தக் கடிதம்;
பெயரில்லா எழுதியது;
சேம் சைடு கோல் போட்ரேள்.

அவா தம்மை பகவனாப்பாக்காதேன்னுட்டார்.

அப்புறம் நீங்க ஏன் மெய்யான வழிபாடு, திருக்கோயில் என்றெல்லாம் சொல்றேள். அவாளுக்கு இதுதான் நீங்க செய்ற தர்மமா? சொல்லுங்கோ.அப்புறம், அவா கத்துக்கொடுத்த யோகா போன்ற விசயமில்லாம் இப்போ ரொம்ப் விலைகொடுத்து டிக்கட்டு வாங்கி போய் சேரணும் தெரியுமோ.
அவா இப்போ ரொம்ப பணக்காரளவாக்குத்தான்.

எங்கிட்ட அவ்வளவு காசு இல்லை.

ஏன் பொள்ளாச்சி, எல்லாஊர்லேயும் கட்டிண்டு வரா. தில்லியிலே, பம்பாயிலே.
பெருமகன், திருமகனாக ஆகிவிட்டார். அதாவது, திருவைத்தரும் பெருமகன்.சும்மா எல்லாப்பக்கமும் திரும்பிப்பாருங்கோ. குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரையோட்டினா எப்படி?

தப்பா சொன்னேன்னா மன்னிச்சுக்கோங்கோ.


மேற்குறித்த அஞ்சலுக்கு என் மறுமொழி;

28/3/10

வேதாத்திரியம்

மகான் வேதாத்திரி மகரிஷிகள்,தன் தூல உடல் விட்டு நீங்கி இறைநிலையோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்ட நினைவுநாள் இன்று- மார்ச் 28 .

தீர்க்கதரிசியான அப்பெருமகனார் இன்றைய நவீன யுகத்தின் போக்கை ஒட்டி  வழங்கியிருக்கும் செயல் திட்டங்கள் நம்மை வியப்பிலும்,மலைப்பிலும் ஆழ்த்துபவை.
தொலை நோக்கோடு - சமூக நலவாழ்வில் மட்டுமே சிந்தனையைச் செலுத்தும் பொதுநோக்காளர்கள் மட்டுமே கண்டடையக்கூடிய அந்த உண்மைகளில் ஒவ்வொரு தனிமனிதனும்,சிறுசிறு குழுக்களும் ஓரளவேனும்  கருத்துச் செலுத்தி..அவற்றைச் செயலாக்க முற்பட்டால் மானுடம் வெல்லும்..பிரபஞ்சம் தழைக்கும்.

வேதாத்திரியம் காட்டும் அந்த வழிகள்....
1.’’போரில்லா நல்லுலகம்’’
2.’’பொருள்துறையில் சமநீதி
3.’’நேர்மையான நீதிமுறை’’
4.  ‘’நில உலகுக்கு ஓர் ஆட்சி’’
5. ‘’சீர் செய்த பண்பாடு’’
6. ‘’சிந்தனையோர் வழி வாழ்வு’’
7. ‘’சிறப்புணர்ந்த பெண்மதிப்பு’’
8. ‘’தெய்வநீதிவழி வாழ்தல்’’
9.  ‘’தேர்த் திருவிழா தவிர்த்தல்’’
10.’’சிறுவர்கட்கே விளையாட்டு’’
11. ‘’செயல் விளைவு உணர்கல்வி’’
12.  ‘’சீர்காந்த நிலை விளக்கம்’’
13. ‘’பார்முழுதும் உணவு நீர் பொதுவாக்கல்’’
14. ‘’பல மதங்கள்..பல கடவுள் பழக்கம் ஒழித்து
               உண்மை ஒன்றைத் தேர்ந்திடல்’’

தனிமனித சமூக நோக்கிலலான இத் திட்டங்களை விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு அசைபோட்டால்தான் விரிவும் ஆழமும் கொண்ட அக் கருத்துக்களை அவற்றின் உண்மையான அர்த்தத்தோடு உள் வாங்கிக் கொள்ள முடியும்

8/3/10

குருவும்,குருடும்

கடந்த ஒரு வாரமாகப் போலிச் சாமியார்கள் பற்றி வரும் செய்திகள் மிகப் பெரிய மனச் சோர்வையும்,சங்கடத்தையும் அளித்து ‘எது நிஜம்..எது பொய்?’என்ற மிகப் பெரிய தார்மீகக் கேள்வியை முன் வைத்திருக்கின்றன.

இறை வழிபாடு என்ற பக்தி மார்க்கத்தில் நமக்கும்,கடவுளுக்கும் இடையே நடு ஆள் தேவையில்லை என்பது உண்மைதான் ; ஆனால் ஞான மார்க்கத்தில் குருவின் கரம் பற்றியே அதற்குள் பிரவேசிக்க வேண்டியிருக்கிறது.

பிறகு ஒரு வேளை அந்தக் குருவின் கையை உதறி விட்டோ, அவருடன் முரண்பட்டோ, அவரையும் கூடக் கடந்தோ போய்விடுவதென்பது வேறு.
ஆனால் கோலத்தின் ஆரம்பப் புள்ளிக்கு குருவின் தேவை அவசியமாகிறது.

இந்தத் தேடல்களைக் கொள் முதலாக்கியே போலிகளும் பிழைப்பு நடத்துவதால் அசல் எது,நகல் எது என உள்ளுணர்வால்...ஆராய்ச்சியால் இனம் பிரித்துக் காண வேண்டியது ஞானத் தேடல் கொண்ட மனிதனின் பொறுப்பாகிறது.

அன்றாட வாழ்க்கை உளைச்சல்களை...தேவைப் பூர்த்திகளைச் சொல்லி அழுவதற்கா குரு...?
அவரது பங்கு உயரமானது...உன்னதமானது.
இக வாழ்வின் இக்கரையிலிருந்து உண்மையான பரத்தை நோக்கிய மறுகரைக்குக் கூட்டிச் செல்லும் ஞான ஆசான் அவர்.
அப்படிப்பட்ட ஒரு குருவைக் கண்டடைதல் எளிதானதில்லை.
குருவைத் தேடி விவேகானந்தர் மேற்கொண்ட பயணம் இந்த உண்மையை எடுத்துச் சொல்லும்.

காவிஉடை தரித்தவனும்,கற்றை முடி தரித்திருப்பவனும் மட்டுமே குருவாகி விடுவதில்லை.
சிறந்த குருவைக் கண்டடைய முதலில் நம்மைத் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.நம்மை ஓரளவு உயர்த்திக் கொண்டு இன்னும் பல உன்னத உயரங்களுக்கு நம்மைக் கூட்டிச் செல்பவரைக் குருவாக வரிக்க வேண்டும்.

மெய்ஞ்ஞானம் என்ற இலக்குத்தான் அங்கு முதன்மை பெற வேண்டுமே அன்றிப் போலிப் புனைவுகளோ ..வேடங்களோ ....புறச் சடங்குகளோ அல்ல.

தேர்வு செய்யும் திறனின்றிக் காற்று அடிக்கும் திசையிலெல்லாம் மந்தையைப் போல் சாய்ந்தால் பிரேமானந்தாக்களும்,நித்யானந்தாக்களும்..இன்ன பிற கபட வேடதாரிகளும்தான் நமக்கு வாய்ப்பார்கள்.

நாம் எப்படியோ ...நாம் பெறுவதும் அப்படியே !

BLIND LEADING THE BLIND

என்னும் அற்புதமான வாசகத்தைத் தனது திருமந்திரத்தில் பின்வருமாறு பிழிந்து தருகிறார் திருமூலர்.

’’குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடுக் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழுமாறே’’

புற வெளிச்சப் போலிகளை ஒதுக்கி உண்மையும்,எளிமையுமான ஞான குருவைக் கண்டடைய நம் அகக் கண் திறக்கட்டும்.

இணைப்பு;காண்க....
அமுதமல்ல..ஆலகால விஷம்!

27/2/10

மூன்று கட்டளைகள்

மனிதன் என்றும் தனியானவனில்லை.
குடும்பமும்,சுற்றமும்,சமூகமும் எப்போதும் அவனைச் சுற்றிச் சூழ்ந்தபடி இருக்கிறது.
இம் மூன்றுடனும் இணங்கி வாழ,
அவனது மனம் தனக்குத்தானே பிறப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டளைகள் மூன்று
என்கிறது வேதாத்திரி மகரிஷிகளின் மன வளக்கலை.

1. எவரையும் ஒருபோதும் விமரிசிக்கவோ..குறை கூறவோ வேண்டாம்.
  Dont comment
2.எதற்காகவும் எவருக்கும் எதையும் ஆணையிட வேண்டாம்.
  Dont command
3.எதன் பொருட்டும் யாரையும் வற்புறுத்த வேண்டாம்.
  Dont demand

இந்த மூன்று கட்டளை
 ’’அறிந்த நெஞ்சில் எல்லா நன்மையும் உண்டாகும்’’
(கண்ணதாசனின் ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடல் போல)
குடும்ப ,சமூக தளங்களில் நல்லிணக்கம் ஏற்படும்போது
தனிமனிதன் பெறுவது
சாந்தி..சாந்தி!சாந்தி!

22/2/10

இறை-ஒரு விளக்கம்




’இறை’என்னும் சொல்லுக்கு,இறைவன்,கடவுள் என்ற பொருள்களோடு,அணு,உயர்ச்சி,தலைமை எனப் பல வகையான பொருள்களைத் தமிழ் அகராதிகளில் காண முடிகிறது.இவை அனைத்துமே இறைப் பண்போடு,இறை இயல்போடு தொடர்பு கொண்டிருப்பவைதான்.

‘அணுவினுக்கு அணுவாய்...அப்பாலுக்கு அப்பாலாய்’ இயங்கும் கடவுளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளும்,குணநலன்களுக்குள்ளும் ,இடம்..கால வரையறைகளுக்குள்ளும் அடக்கிச் சொல்ல முனைவது,கங்கைப் பெரு வெள்ளத்தைச் சிறு சங்குக்குள் அடக்க முயல்வது போன்ற அறிவீனம்.

தமிழ் மரபு...,
கண்டவர் விண்டிலர்...விண்டவர் கண்டிலர்’
என்று கூறுவது இந்தப் பேதமை குறித்ததுதான்.

நான்கு வேதங்களும்,ஆறு சாத்திரங்களும்,பதினெண் புராணங்களும்,ஆய கலைகள் அறுபத்து நான்கும் விளக்க முனைந்து - முற்றும் முடிவாக விளக்க இயலாதபடி தோற்றுப் போனது இறைத் தத்துவம்.
’வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே’’
என்று தனது ‘சிவ புராண’ த்தில் இதனையே விளக்குகிறார் மாணிக்க வாசகர்.

இறையின் நான்கு பரிமாணங்களாகிய ,
எட்டிப் பிடிக்கச் சாத்தியமில்லாத உச்சம்-
அடிதேட முடியாத ஆழம்-
அளக்க இயலாத அகலம்-
நுணுகிப் பார்த்தாலும் தென்படாத நுட்பம்-
ஆகிய நான்குமே
’ஓங்கி..ஆழ்ந்து...அகன்ற ...நுண்ணியன்’’
என்ற சொற்களில் பதிவாகின்றன.

‘ஐ’என்ற சொல் வியப்பின் குறியீடு.
இறையைக் கண்டு ‘’ஐயா’’என வியப்பதைத் தவிர அதை விளக்க முயல்வது கடினம் என்பதே திருவாசகம் புலப்படுத்தும் உண்மை.

அனைத்தையும் கடந்து....அனைத்துக்கும் உள்ளிருப்பது இறை(கட+உள்) என உணர்த்தப் பிறந்த சொல்லே கடவுள்.

ஆதியும்,அந்தமும் அற்றவனாய்...
இருள் சேர் இரு வினையும் சேராதவனே இறைவன்.

’மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன்’’
என்று இறைத் தத்துவத்துக்கு ஒரு சிறு விளக்கம் தந்து பார்க்க முனைகிறார் கம்பர்.
கடவுளுக்கு மூலம்..நடு..முடிவு ஆகியவை இல்லை;
ஆனால் அம் மூன்றுமாக இருப்பவன் அவனே(மும்மைத்தாய);
அவனே காலம்;அவனே காரணம்;எனவே அவை அவனைப் பற்றுவதில்லை.

‘’தீயினுள் தெறல் நீ
பூவினுள் நாற்றம் நீ
அறத்தினுள் அன்பு நீ
மறத்தினுள் மைந்து நீ’’
எனப் பிரபஞ்சத்தின் எல்லாப் பொருள்களிலும் அவற்றின் சாரமாக அவன் உறைவதை எடுத்துக் காட்டுகிறது சங்கப் பரிபாடல்.

‘’தீக்குள் விரலை வைத்தால்’’ நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் கிடைப்பதாகப் பாரதி பாடியதும் இதை ஒட்டியதுதான்.

வேத,உபநிடத உட்பொருளை,இந்தியத் தத்துவச் சிந்தனை மரபுகளை ஆழமாக உள் வாங்கிக் கொண்டிருக்கும் வேதாத்திரி மகரிஷி அவர்கள்,
கீழ்க்காணும் நான்கு பண்புகளை இறைநிலைக்கு உரியதாக்குகிறார்.
1.வற்றாயிருப்பு
தொடுமணற்கேணி போல எக் காலத்திலும்,எச் சூழலிலும் வற்றாத பண்பு.
2.பேராற்றல்
3.பேரறிவு
4.காலம்
‘’வற்றயிருப்பு பேராற்றல் பேரறிவு காலம் எனும்
வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்’’
(ஞானக் களஞ்சியம்)

இப் பெருவெளியை அறிவால் ஆராய்ந்து தெளிய மகரிஷி அவர்கள்  காட்டிய நெறிகளே
எளிய முறைக் குண்டலினி யோக’ மாகவும்,
அகத்தவ,அகத்தாய்வுகளை உள்ளடக்கிய ‘மன வளக் கலை’ யாகவும் வடிவு கொண்டு
வாழ்வியல் செம்மைக்கு வழிகாட்டி வருகின்றன.

LinkWithin

Related Posts with Thumbnails