மனிதன் என்றும் தனியானவனில்லை.
குடும்பமும்,சுற்றமும்,சமூகமும் எப்போதும் அவனைச் சுற்றிச் சூழ்ந்தபடி இருக்கிறது.
இம் மூன்றுடனும் இணங்கி வாழ,
அவனது மனம் தனக்குத்தானே பிறப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டளைகள் மூன்று
என்கிறது வேதாத்திரி மகரிஷிகளின் மன வளக்கலை.
1. எவரையும் ஒருபோதும் விமரிசிக்கவோ..குறை கூறவோ வேண்டாம்.
Dont comment
2.எதற்காகவும் எவருக்கும் எதையும் ஆணையிட வேண்டாம்.
Dont command
3.எதன் பொருட்டும் யாரையும் வற்புறுத்த வேண்டாம்.
Dont demand
இந்த மூன்று கட்டளை
’’அறிந்த நெஞ்சில் எல்லா நன்மையும் உண்டாகும்’’
(கண்ணதாசனின் ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடல் போல)
குடும்ப ,சமூக தளங்களில் நல்லிணக்கம் ஏற்படும்போது
தனிமனிதன் பெறுவது
சாந்தி..சாந்தி!சாந்தி!
27/2/10
22/2/10
இறை-ஒரு விளக்கம்
’இறை’என்னும் சொல்லுக்கு,இறைவன்,கடவுள் என்ற பொருள்களோடு,அணு,உயர்ச்சி,தலைமை எனப் பல வகையான பொருள்களைத் தமிழ் அகராதிகளில் காண முடிகிறது.இவை அனைத்துமே இறைப் பண்போடு,இறை இயல்போடு தொடர்பு கொண்டிருப்பவைதான்.
‘அணுவினுக்கு அணுவாய்...அப்பாலுக்கு அப்பாலாய்’ இயங்கும் கடவுளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளும்,குணநலன்களுக்குள்ளும் ,இடம்..கால வரையறைகளுக்குள்ளும் அடக்கிச் சொல்ல முனைவது,கங்கைப் பெரு வெள்ளத்தைச் சிறு சங்குக்குள் அடக்க முயல்வது போன்ற அறிவீனம்.
தமிழ் மரபு...,
‘கண்டவர் விண்டிலர்...விண்டவர் கண்டிலர்’
என்று கூறுவது இந்தப் பேதமை குறித்ததுதான்.
நான்கு வேதங்களும்,ஆறு சாத்திரங்களும்,பதினெண் புராணங்களும்,ஆய கலைகள் அறுபத்து நான்கும் விளக்க முனைந்து - முற்றும் முடிவாக விளக்க இயலாதபடி தோற்றுப் போனது இறைத் தத்துவம்.
‘’வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே’’
என்று தனது ‘சிவ புராண’ த்தில் இதனையே விளக்குகிறார் மாணிக்க வாசகர்.
இறையின் நான்கு பரிமாணங்களாகிய ,
எட்டிப் பிடிக்கச் சாத்தியமில்லாத உச்சம்-
அடிதேட முடியாத ஆழம்-
அளக்க இயலாத அகலம்-
நுணுகிப் பார்த்தாலும் தென்படாத நுட்பம்-
ஆகிய நான்குமே
‘’ஓங்கி..ஆழ்ந்து...அகன்ற ...நுண்ணியன்’’
என்ற சொற்களில் பதிவாகின்றன.
‘ஐ’என்ற சொல் வியப்பின் குறியீடு.
இறையைக் கண்டு ‘’ஐயா’’என வியப்பதைத் தவிர அதை விளக்க முயல்வது கடினம் என்பதே திருவாசகம் புலப்படுத்தும் உண்மை.
அனைத்தையும் கடந்து....அனைத்துக்கும் உள்ளிருப்பது இறை(கட+உள்) என உணர்த்தப் பிறந்த சொல்லே கடவுள்.
ஆதியும்,அந்தமும் அற்றவனாய்...
இருள் சேர் இரு வினையும் சேராதவனே இறைவன்.
‘’மூலமும் நடுவும் ஈறும் இல்லதோர் மும்மைத்தாய
காலமும் கணக்கும் நீத்த காரணன்’’
என்று இறைத் தத்துவத்துக்கு ஒரு சிறு விளக்கம் தந்து பார்க்க முனைகிறார் கம்பர்.
கடவுளுக்கு மூலம்..நடு..முடிவு ஆகியவை இல்லை;
ஆனால் அம் மூன்றுமாக இருப்பவன் அவனே(மும்மைத்தாய);
அவனே காலம்;அவனே காரணம்;எனவே அவை அவனைப் பற்றுவதில்லை.
‘’தீயினுள் தெறல் நீ
பூவினுள் நாற்றம் நீ
அறத்தினுள் அன்பு நீ
மறத்தினுள் மைந்து நீ’’
எனப் பிரபஞ்சத்தின் எல்லாப் பொருள்களிலும் அவற்றின் சாரமாக அவன் உறைவதை எடுத்துக் காட்டுகிறது சங்கப் பரிபாடல்.
‘’தீக்குள் விரலை வைத்தால்’’ நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் கிடைப்பதாகப் பாரதி பாடியதும் இதை ஒட்டியதுதான்.
வேத,உபநிடத உட்பொருளை,இந்தியத் தத்துவச் சிந்தனை மரபுகளை ஆழமாக உள் வாங்கிக் கொண்டிருக்கும் வேதாத்திரி மகரிஷி அவர்கள்,
கீழ்க்காணும் நான்கு பண்புகளை இறைநிலைக்கு உரியதாக்குகிறார்.
1.வற்றாயிருப்பு
தொடுமணற்கேணி போல எக் காலத்திலும்,எச் சூழலிலும் வற்றாத பண்பு.
2.பேராற்றல்
3.பேரறிவு
4.காலம்
‘’வற்றயிருப்பு பேராற்றல் பேரறிவு காலம் எனும்
வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்’’
(ஞானக் களஞ்சியம்)
இப் பெருவெளியை அறிவால் ஆராய்ந்து தெளிய மகரிஷி அவர்கள் காட்டிய நெறிகளே
‘எளிய முறைக் குண்டலினி யோக’ மாகவும்,
அகத்தவ,அகத்தாய்வுகளை உள்ளடக்கிய ‘மன வளக் கலை’ யாகவும் வடிவு கொண்டு
வாழ்வியல் செம்மைக்கு வழிகாட்டி வருகின்றன.
’அவனருளால் அவன் தாள் வணங்கி’....
''தனம்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே’’-
அபிராமி அந்தாதி
’அவனருளால் அவன் தாள் வணங்கி’இவ்வலைப்பூ தொடங்குகிறது.
என்னை ஆட்கொண்ட அன்னை ,வழிநடத்தும் அன்னை,என்றென்றும் உற்ற துணையாய் என்னுள்ளே உறைந்திருக்கும் அன்னை,பாரதியின் கண்ணனைப் போல் ‘நண்பனாய்,மந்திரியாய்,நல்லாசிரியனுமாய்’ நாளும் என் கரம் பற்றிக் கூட்டிச் செல்லும் மதுரை மீனாளின் திக்கு நோக்கி வணங்குகிறேன்.
என் உள்ளம் ஒருமுகப்பட்டதும்,ஒன்றிக்கலந்ததும்,உலகியல் லாபங்கள் எதையும் வேண்டாமல் அவளில் மட்டுமே லயித்துக்கிடந்ததும் எண்ணிப் பார்த்தாலே பரவசப் பேரானந்தப் பெருக்கைக் கிளர்த்தும் அனுபவங்கள்.
இன்று....உள்ளொளி தேடும் என் அடுத்த அகமுகப் பயணத்தைத் தொடங்கி வைத்திருப்பவளும் அவளே.
பக்தி மார்க்கத்தின் அடுத்த கட்டத்துக்கு....
உருவத்திலிருந்து அருவம் நோக்கிய ஞான மார்க்கத்துக்கு நகர்ந்து செல்லவும் அவளின் அனுமதியையே நான் கோருகிறேன்.
மிகச் சரியாக இதே தருணத்தில் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பற்றிய ஒரு தகவலைக் கேள்விப்பட நேர்ந்தது.
தக்ஷிணேஸ்வரக் காளியிடம் தன் நெஞ்சை இழந்திருந்த பரமஹம்ஸர்,உருவமற்ற ஓர் ஒன்றிப்புக்கு மனதைக் கொண்டு செல்லத் தன் குருவால் பணிக்கப்பட்டபோது,காளியிடம் அதற்கான அனுமதி கோருகிறார்;காளி தன் கை வாளை எடுத்தளித்து நீ அடுத்த நிலை அடைய என் உருவம் தடையென்றால் அதை வெட்டி வீழ்த்திவிட்டுப் போ என்றாளாம்.
என்னுள்ளே சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் என்னருமை மீனாட்சியும் அப்படித்தான்;
அவள் என்னைச் சுதந்திரமாக இயங்க விடுபவள்;
தன்னுள்ளே மட்டுமே நான் என்னைத் தளைப்படுத்திக் கொண்டு விடுவதை விரும்பாதவள்;
உண்மையின் தேடலைப் பல தளங்களிலிருந்தும் பெற என்னை விருப்பத்தோடு வழி கூட்டி அனுப்பும் அன்னையவள்.
எங்கே சுற்றினாலும் தாய் மடி தேடி ஓடி வரும் என் குணம் அவள் வழங்க நான் பெற்றதுதானே?
இந்த இக் கணத்தில் ‘வேதாத்திரியம்’என்ற மகா சாகரத்தின் கரையில் என்னை நிற்க வைத்திருக்கிறாள் என் தாய்.
இளமை முதலே,இறை நம்பிக்கையும்...பிடிப்பும் இருந்தாலும் ’மதமான பேய்’என்னைப் பிடித்திருக்கவில்லை என்பதால்.....
மூடப் பழக்கங்களையும்,இயற்கை மீறிய புராணப் புனைவுகளையும் மறுதலிக்கும் உள்ளப் போக்கு என்னிடம் குடியிருந்ததால்......
இறை நிலையைப் பகுத்தறிவுப் பார்வையுடன் காணும் தேட்டம் என்னுள் பொதிந்திருந்ததால்,
தனி மனித ஆன்மீகத்தோடு நின்று விடாமல்,சமூக அக்கறை என்ற உறுதியான கொள்கைப் பிடிப்பும் எனக்கு இருந்து வந்திருப்பதால்...
இந்த குணங்களுக்கெல்லாம் ஏற்ற மிகச் சிறந்த ஒரு கோட்பாட்டின் சன்னதியிலேதான் என் தாய் என்னை வழிப்படுத்திக் கொண்டு போய் விட்டிருக்கிறாள்என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
‘எந்தரு மகானுபாவோ’.....
இந்தப் புனிதமான தருணத்தில்,உண்மையின் தரிசனத்தை உள்ளொளியால் பெற்றுத் தான் பெற்ற இன்பத்தை வையம் பெற வழங்கிய அத்தனை மகான்களையும் அடி பணிந்து வந்தனம் செய்கிறேன்.
நான் உள் வாங்கிக் கொள்ளும் உள் முகத் தேடல்களை’வேதாத்திரியம்’,மற்றும் தமிழிலக்கிய மரபுகளோடு ஒருங்கிணைத்து ,
நான் பருகும் அமுதில் ஒரு துளியேனும் வலை வாசகர்களோடு பகிர முயல்கிறேன்;விழைகிறேன்.
இவ் வலைக்கு உங்கள் வாழ்த்துக்களைக் கோருகிறேன்.
‘’வாழ்க வையகம்’’
‘’வாழ்க வளமுடன்’’
காயகல்பதத்துவம் -2
காயகல்பத் தத்துவத்தை விளங்கிக் கொள்ள,
மனித உடல்,
உயிர்,
ஜீவகாந்தம்
ஆகிய மூன்று முழுமுதல் கோட்பாடுகளைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
உடலைப்
பரு உடல்,
சூக்கும உடல் அல்லது நுண்ணுடல்(astral body),
காந்த உடல் அல்லது காரண உடல்(causal body)
என்ற மூன்றாகப் பகுத்துக் கொள்ளலாம்.
பரு உடல் என்பது,கண்ணுக்குப் புலனாவது.புறத் தோற்றம் என்பது,இப் பரு உடல் சார்ந்ததாகவே உள்ளது.நிலம்,நீர்,தீ,வான்,வளி(காற்று) என்னும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் - மேற்குறித்த ஐந்து பௌதிகப் பிரிவுகளின் கூட்டாய் உருவாகியிருப்பதே மனிதனின் பரு உடல்.
பஞ்ச பூதங்களில் ஒன்றான விண் அல்லது ஆகாசம், உயிரினங்களுக்குள் சீரான முறையில் சுற்றோட்டம் அமைத்தபடி சுழன்றோடிக் கொண்டிருக்கிறது. இத்தகைய விண்துகள்களால் ஆனதே
உயிர் அல்லது நுண்ணுடல்.
விண், பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கையில் ‘மகாகாசம்’ என்றும்,நிலம்,நீர்,நெருப்பு,காற்று என்ற ஐந்து பௌதிகப் பொருள்களில் கலந்துள்ளபோது ‘பூதாகாசம்’என்றும்,உயிரினங்களுக்குள் ஒன்றிக் கலந்திருக்கையில் ‘சித்தாகாசம்’ என்றும் பெயர் பெறுகிறது.
உயிரற்ற பொருள்களில் உள்ள விண் 'fundemental energy particle' என்றும்
உயிருள்ள பொருள்களில் உள்ள உயிர்த் துகளாகிய விண் 'life energy particle'என்றும் வழங்கப்படுகின்றன.
உயிர்,அல்லது விண் என்பது,கோடிக்கணக்கான இறைத் துகள்களின் தொகுப்பு.இந்த இறைத் துகள்களே நுண்ணணு,பரமாணு,ஈதர்,தூசி என்ற பல பெயர்களால் அழைக்கப்படுவன.ஒவ்வொரு உயிர்த் துகளும் தன்னைத் தானே சுற்றி வருகையில் அந்தத் தற்சுழற்சியினால் அதிலுள்ள இறைத் துகள்கள் காந்த அலைகளாக வெளிப்படுகின்றன.அவ்வாறு வெளிவரும் காந்த அலைகளின் தொகுப்பே ஜீவகாந்தம்.மனித உடல் முழுவதும் ஜீவகாந்தமாகப் பரவியுள்ள இந்த இறைத் துகள்களே காந்த உடலைக் கட்டமைக்கின்றன.
காந்த சக்தி ,உயிரினங்களில் உள்ள விண்துகள்களாகிய உயிர்த்துகள்களிலிருந்து வெளியேறும்போது, ’ஜீவகாந்தம்’ என்றும், உயிரற்ற பொருள்களிலுள்ள விண்துகள்களிலிருந்து வெளியேறுகையில் ‘வான் காந்தம்’ என்றும் பெயர் பெறுகிறது காந்த சக்தி ,மனித உடலின் செல்களை ஒன்றோடு ஒன்றாய் உறுதியாகப் பிணைத்து வைத்திருப்பது இந்த ஜீவகாந்த ஆற்றலேயாகும்.
நமது இரு உள்ளங்கைகளையும் விரித்து அரைஅடி தூரத்தில் வைத்துக் கொண்டபடி,சிறிது நேரம் அந்த உள்ளங்கைகளின் மீதே கருத்துச் செலுத்தியபடி இருந்தால்,இரு கைகளுக்கும் இடையே ஒரு ஈர்ப்புணர்ச்சி உண்டாவதைக் கண்டு கொள்ள முடியும்.இந்த ஆற்றலே ஜீவகாந்தம். உடலின் செல்களை ஈர்த்துப் பிடித்தபடி உடல் முழுதும் ஒரு கட்டிடம் போன்ற கட்டுக் கோப்புடன் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் இதுவே. அதனாலேயே இது,காந்த உடல்,காரண உடல் எனப் பெயர் பெறுகிறது.
இம் மூன்றை அடித் தளமாகக் கொண்டு வேதாத்திரியம் கட்டமைத்த உயர்வழியே காயகல்பக்கலை.
’'விண்ணென்ற நுண்ணணுதான் உடலுக்குள்ளே விரைந்தாற்றும் உயிராம் ஜீவான்மா,
அ..தே நுண்ணணுவின் தன்மையினால் அறிவமைந்து நுழைபுலனால் இயக்கம் ஒழுங்காக ஆற்றும்
உண்மையிலே அணுச் சுழலின் அலையே காந்தம்
உடல் முழுதும் நிறைந்து அது திணிவு பெற்று எண்ணரிய உடலியக்கம்,மன இயக்கம் எல்லாமாய் ஆற்றும் திருவருள் மதிப்போம்’’-
வேதாத்திரி மகரிஷிகள்

காயகல்பதத்துவம் -1
நோய்,முதுமை,மரணம்......
இம் மூன்றும் மனிதகுலம் சந்தித்தே ஆக வேண்டிய சவால்கள்...
இவற்றை அச்சமின்றி எதிர்கொள்ளக்கூடிய வகையில்,உடல் நலத்தைக் காத்து ,இளமைப் பொலிவோடு கூடிய நீண்ட ஆயுளை அளித்து,வாழும் காலம் வரை நோயின்றி வாழ வைக்க வல்லமை கொண்டது, காயகல்பக்கலை.
காயகல்பம் என்பது..தங்கபஸ்பம் போலத் தாதுப் பொருட்களாலோ,மூலிகை மருந்துகளாலோ செய்யப்பட்ட ஒரு மருந்தென்று எண்ணி மதி மயக்கம் கொள்வோர் பலர்.
காயகல்பம்..உயிரின் ஆற்றலைத் தேக்கி...அதைச் சேமித்து...அதன் வழி,.உடலை...உயிரைப் புடம் போடும் அரியதொரு கலைப் பயிற்சி.
உடலைப் பல நாள் அழியாமல் காக்கும்பயிற்சி முறையாகிய இக் கலை,சஞ்சீவினி மந்திரம் போன்றதொரு பெரும் புதையல்.
மனித குலத்துக்குக் கிட்டியுள்ள மாபெரும் பொக்கிஷம் என்றே இதனைக் கூறலாம்.
இக் கலையின் முன்னோடிகளாக விளங்கியவர்கள் ,தமிழ்நாட்டில் பழங்காலத்தில் வாழ்ந்து வந்த சித்தர்பெருமக்கள்
.உயிரைப் பற்றியும்,உடலைப் பற்றியும்...அவ்விரண்டுக்கும் உள்ள உறவைப் பற்றியும் தெளிவாகப் புரிந்து வைத்திருந்த சித்தர்கள்..,
குறிப்பிட்ட இப் பயிற்சியால் மனிதன்,நோயின்றி வாழலாம்,துன்பமின்றி இளமையோடு வாழலாம்,அறிவுத் திறத்தோடு ஒளிரலாம்,எல்லாவற்றுக்கும் மேலாக ...மரணமே இல்லாமலும் கூட வாழலாம் என்பதைத் தெரிந்து கொண்டனர்.
தங்களை உண்மையான ஆர்வத்துடன் நாடி வருபவர்களுக்கு இப் பயிற்சியை மனமுவந்து கற்பிக்கவும் செய்தனர்.
.‘’கால்பிடித்து மூலக் கனலை மதி மண்டலத்தின்
மேலெழுப்பில் தேகம் விழுமோ பராபரமே’’
என்ற தாயுமானார் வாக்கும்,
‘’மூலமாம் குளத்தினில் முளைத்தெழுந்த கோரையைக்
காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பீரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆலமுண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே’’
’’உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவார் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர்பாதம் அய்யன்பாதம் உண்மையே’’
என்னும் சிவவாக்கியர் பாடல்களும்,
’’வாயு வழக்கறிந்து செறிந்தடங்கில் ஆயுட்பெருக்கமுண்டாம்’’
என்ற பிற்கால ஔவையின் வரிகளும்’காயகல்பக் கலையின் மகத்துவத்தை நம் முன்னோர் அறிந்து வைத்திருந்தனர் என்ற உண்மையை உறுதிப்படுத்துகின்றன.
அரிதான இக் கலையைத் தனது முன்னோடிகளிடமிருந்து ஆழமாக உள்வாங்கி ,இன்றைய வாழ்க்கை முறைக்கேற்ப அதனை வடிவமைத்து..,உடற்கூற்று அறிவியல்,விண்வெளி விஞ்ஞானம் ஆகிய அறிவியல் பின்னணிகளோடும்,ஆன்மீக தத்துவப் புரிதல்களோடும் ஏற்ற பல விளக்கங்கள் தந்து,‘காயகல்ப யோகமாக’த் தமது மனவளக் கலைப் பயிற்சியில் ஒருங்கிணைத்து அளித்திருப்பவர் மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
ஆய கலைகள் அறுபத்து நான்கினுக்கும் இல்லாத தனிச் சிறப்புப் பெற்ற இக் கலையை ,உலக சமுதாய சேவா சங்கத்தின் கீழ் உலகின் பல நகரங்களிலும் இயங்கிவரும் மனவளக்கலை மன்றங்களில் எளிதாக மூன்றே மணி நேரத்தில் பயின்று விடலாம்.
பயிற்சி எளிது....அதைச் செய்வதற்கு ஆகும் நேரமும் குறைவு...
ஆனால் இக் கலைக்குப் பின் ஒளிந்திருக்கும் உடல்..உயிர்த் தத்துவம் மிக ஆழமானது.அக்காரணம் பற்றியே காயகல்பதத்துவம் பற்றிய முறையான தத்துவ விளக்கத்தை அளித்த பிறகே இப் பயிற்சி...தக்க பேராசிரியர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
(அத் தத்துவம் பற்றிய விளக்கம்...தொடந்து அடுத்தடுத்த இடுகைகளில்..)
ஊனுடம்பு ஆலயம் -2
’என்பு தோல் போர்த்திய உடம்பு’,உலகியல் வாழ்க்கையின் வெற்றிக்கும்,ஆன்மிக சாதனைக்கும் உறுதுணையாவதைப் பல்வேறு கோணங்களிலிருந்தும் நிறுவிக் காட்டுகிறார் வேதாத்திரி மகரிஷிகள்.
சமுதாயப் பார்வை;
தனிமனிதன் , சமுதாயத்தின் ஓர் அங்கம் என்றால் அவனது உடலும் அவனுக்குச் சொந்தமானதில்லை, அது சமுதாயத்தின் சொத்தாகவே ஆகிவிடுகிறது.சமூக வாழ்வில்-குடும்பத்திலும்,வெளியிலும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பட்ட ஏராளமான .கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடப்பாடு....தவிர்க்க முடியாத...தட்டிக் கழிக்கக் கூடாத கடமை அவனுக்கிருக்கிறது.தன் பெற்றோருக்கும்,மனைவி,மக்கள்,சுற்றத்துக்கும் ஆற்றியாக வேண்டிய கட்டாயமான கடமைகளைத் தவிர ஒரு சமுதாய மனிதனாக....ஒன்றை உற்பத்தி செய்தோ...புதிதாக ஒரு கண்டுபிடிப்பைச் செய்தோ...பயனுள்ள செயல்களை ஆற்றியோ...பிறருக்குத் தொண்டு செய்தோ.... ஏதேனும் ஒரு வழியில் சமூகத்துக்குத் தான் பட்ட நன்றிக் கடனை ஒருவன் தீர்த்தே ஆக வேண்டும் என்றால்,அதற்கு உதவும் கருவியாகவேனும் அவன் தன் உடலை ஆயத்தப்படுத்தியே ஆக வேண்டும்.
’விசையுறு பந்தினைப் போல் மனம்வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’’
என,நிலச் சுமையென வாழ்ந்திடாமல்...மாநிலம் பயனுற வாழ்வதற்காகவே தன் உடல் உறுதிப்பட்டாக வேண்டும் எனப் பாரதி. பராசக்தியிடம் மன்றாடியது இது பற்றியே.
ஆன்மீக நோக்கு;இறைநிலைத் தெளிவு பெற்று,வாழ்வின் முழுமையான நோக்கத்தை எட்டிப் பிடிக்க உதவும் யோக சாதனைகளுக்கும் உடலே உரிய கருவியாகிறது.
நோயுற்ற உடல்,ஆன்மீகப் பயணத்துக்கு ஒரு தடைக்கல்.மனவளக்கலையின் அடுத்த நிலையாகிய ‘அகத் தவம்’ மேற்கொள்கையில்,உடலும் அதற்கு ஏற்ற உரம் பெற்றதாக இருந்தால்தான் தவத்தில் மனம் ஒருமைப்பாட்டுடன் ஒன்றி லயித்துத் தன்வசமிழக்க முடியும்.
‘உடல் என்ற வாகனத்தைப் பேணிப் பாதுகாத்தால்தான் இந்த ஆன்மீகப்பயணத்தை வெற்றியோடு முடிக்க முடியும்’
என்பது மகரிஷியின் அருள் வாக்கு.
‘’உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே’’
என்ற திருமூலர் வாக்கை மகரிஷிகள் மேற்கோள் காட்டுவது இதை ஒட்டியதே.
தமிழக ஆலயங்களின் ஆகம விதிகளை நுணுகிப் பார்த்தால்,அவற்றின் கட்டிட அமைப்பு- lay out-மனித உடலின் மாதிரி(sample)யாகவே அமைந்திருக்கும் என்பதையும்,மனித இதயம் உள்ள இடத்தில் கோயிலின் கருவறை அமைந்திருக்கும் என்பதையும் இங்கே சற்று நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
.நிலம்,நீர்,தீ,வான்,வளி எனும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் இந்தப் பிரபஞ்சம் கட்டமைக்கப்பட்டிருப்பது போலவே மனித உடலும் இவ்வைந்தின் ஒருங்கிணைப்பால் ஆனதேயாகும்.
உடலின் இரத்த ஓட்டம்,வெப்ப ஓட்டம்,காற்றோட்டம் இம் மூன்றும் சீராக இருந்தால் மட்டுமே உடலுக்கும் உயிருக்கும் இணக்கமான நல்லுறவு ஏற்படும்.
இவ்விணக்கமான நிலையே நம்மை யோக மார்க்கத்துக்கு இட்டுச் செல்லும் முதல் வாயில்.
அற்புதமான இந்த வாயிலின் கதவுகளை மிக எளிமையான உடற்பயிற்சி முறைகளால் திறந்து வழங்கியிருக்கிறது வேதாத்திரியம்.
வேதாத்திரியத்தின் எளிய முறை உடற்பயிற்சி;
நின்ற நிலை,அமர்ந்த நிலை,மல்லாந்தும்,குப்புறப்படுத்தும் உள்ள நிலை ஆகிய மூன்று நிலைகளில் ,மிக எளிதான சில அசைவுகளால் செய்யப்படும் இப் பயிற்சி முறைகள்,பல்வேறு மருத்துவத் துறைகளில் மகரிஷியவர்கள் கொண்டிருந்த அனுபவ அடிப்படையில்,பல்லாண்டுக் காலம் அவற்றைப் பலவகையான சோதனைகளுக்கு உட்படுத்திப் பலன்களைத் தெளிவாக உறுதி செய்தபின்னர் உலகுக்கு அருளிய கொடையாகும்.
1.கைப் பயிற்சி
2.கால் பயிற்சி
3.மூச்சுப் பயிற்சி
4.கண் பயிற்சி
5.கபாலபதி
6.மகராசனம்
7.உடலைத் தேய்த்தல்(massaging)
8.உடலை அழுத்துதல்(acupressure)
9.உடல் தளர்த்துதல் (relaxation)
என ஒன்பது பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் இப் பயிற்சியைச் செய்து முடிக்க ஆகும் மொத்த நேரம் 30,35 நிமிடங்கள் மட்டுமே.
உடல் உறுப்பு எதையும் அதிகமாக வருத்தவே செய்யாத இப் பயிற்சியை எட்டு வயது முதல் எண்பது வயது வரை-அதற்கு மேலும் உள்ளவர்களும் கூட- எவருமே எளிதாகச் செய்து முடிக்கலாம்.
‘’எதிரதாக் காக்கும் அறிவினோர்க்கில்லை மேல்
அதிர வருவதோர் நோய்’’
என்பது வள்ளுவம்.
நோய்கள் வருமுன் காக்க,நோய்த் தடுப்பாற்றலைப் பெருக்கிக் கொள்ள இப் பயிற்சியைக் காட்டிலும் சிறந்த மாமருந்து வேறெதுவுமில்லை.
பி.கு; அறுபது வயதை எட்டிக் கொண்டிருக்கும் என்னால் இப் பயிற்சி முழுவதையும் - ஒன்றுவிடாமல்-எளிதாகச் செய்ய முடிகிறது.ஒன்றரை ஆண்டுகளாய் இதைப் பயிலத் தொடங்கியபின்,பெரிதாகவோ,சிறிதாகவோ எந்த நோயும் என்னை அதிகமாக எட்டிப் பார்த்துத் தொந்தரவு செய்வதில்லை.சமீபத்தில் என் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்த மருத்துவர் இளமைப்பருவத்துக்குரிய இரத்த அழுத்தம் என்னுடையது என்று குறிப்பிட்டார்.அந்தப் புகழ் போய்ச் சேர வேண்டியது,மனவளக்கலைக்கு மட்டுமே.குறிப்பாக இரவுத் தூக்கம் இழந்து தவித்த எனக்கு -அதை, நிம்மதியான சுகமான உறக்கமாக மாற்றிக்கொடுத்திருப்பவை, பயிற்சியின் இறுதிப் பகுதியில் உள்ள உடல் தேய்த்தல்,அழுத்தல்,தளர்த்தல் ஆகியவை.
‘’யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’’

ஊனுடம்பு ஆலயம் - 1
’’காயமே இது பொய்யடா...வெறும் காற்றடைத்த பையடா’’
என்பது மனித உடலின் நிலையாமை குறித்து முன் வைக்கப்படும் பொதுவான கருத்து.
‘’குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு’’ என்கிறது வள்ளுவம்.
பறவை ,தன் கூட்டிலிருந்து பறந்து விட்டால் அந்த வெற்றுக் கூட்டிற்கு என்ன மதிப்போ அதுவேதான் உயிரற்ற உடலுக்கும் கிடைக்கிறது
.''பேரதனை நீக்கிப் பிணமென்று பேர் வைத்து...’’ என்பார் திருமூலர்.
மனிதர்கள் புனைந்து கொள்ளும் ஒப்பனைப் பொருள்கள் இல்லையென்றால்....தொடர்ந்து சில நாட்கள் நீராடவில்லையென்றாலும் கூட நாற்றமடித்து விடுவது இந்த யாக்கை என்ற பொருள்பட,
‘’புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது’’ என்கிறது மணிமேகலை.
உடலைப் பற்றிய இத்தகைய கருத்தாக்கங்கள் ஒரு புறம் இருந்தாலும்,அதன் நிலையற்ற தன்மையினையே அவை குறிப்பிடுவதாகக் கொள்ள வேண்டுமே தவிர,உடலை இழித்துப் பேசுவதாகக் கொள்ள முடியாது.
‘’அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’’ என்கிறாள் ஔவை.
’’மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே’’ என்கிறது தேவாரம்.
இம் மண்ணுலக வாழ்வை உடலைக் கருவியாகக் கொண்டே நடத்தியாக வேண்டும்.உயிர் உடலில் குடியிருக்கும் நாள் வரை அதைச் செம்மையாகப் பேணிக் காப்பதால் மட்டுமே, நாமும் நன்மையடைந்து,சமூகத்துக்கும் நம்மால் இயன்றதைச் செய்ய முடிகிறது.இல்லாவிட்டால் ‘’நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி’’ அரிதரிதாய்க் கொண்டு வந்த உடலாகிய ’’தோண்டியை’’ வெறுமே போட்டு உடைத்து,அதை வீணாக்க வேண்டியதுதான்.
ஆன்மீக நோக்கிலும் உடல் சில காரணங்களுக்காக முதன்மைப் படுத்தப்படுகிறது; உயர்வாகப் போற்றப்படுகிறது.
அவற்றுள் தலையாயது....உயிர்,தன் மூலத்தை...இறைநிலையைக் கண்டடைய உடல் ஒரு சாதனமாக இருப்பதுதான்.
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைச் சக்தி மனித உடலுக்குள்ளேயும் உறைவதைக் கண்ட ஞானிகளும்,சித்தர்களும் உடலையே இறைவன் உறையும் ஆலயமாய்க் கண்டு கொண்டனர்
.‘’உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி விளக்கே’’
’என்று இவ்வுண்மையைப் பிரகடனம் செய்யும் திருமூலர்,
‘’தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற்போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே’’
என...உடலுக்குள் ஜீவனாய்..சிவனாய் உறையும் கடவுளைக் கண்டடையப் பரிந்துரைக்கிறார்.
.’’ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல்
நானென்றிருந்து நலனழிந்தேன் பூரணனே’’
என்பது பட்டினத்தடிகளின் வாக்கு.ஆறாம் அறிவு பெற்ற மனிதனுக்கன்றி வேறு எந்த உயிரினத்துக்கும் இந்த இறைத் தேடல் வாய்ப்பதில்லை.
’’புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்
எம்பெருமான்மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்’’
என்று பல பிறவிகளிலும் அடைய முடியாத ஆன்ம தரிசனம் - உள்ளொளி மனிதப் பிறவியால் மட்டுமே சாத்தியமாவதைத் தனது சிவ புராணத்தில் கோடிட்டுக் காட்டுகிறர் மணி வாசகர்.
உயிரின் உய்வு...அறிவின் முழுமை...இறைநிலைத் தெளிவு இவற்றை நோக்கிய பாதையில் பயணிக்க நமக்கு வாகனமாக வாய்த்திருக்கும் அருட்கொடையே மனித உடல்.
’’வல்லாய் உடலில் இயக்கம் அவன்வாழ்வில் உயிரில் அறிவும் அவன்’’
என எளிமையான விளக்கம் தந்து,உடலைத் துச்சமாக எண்ணி ஒதுக்கிவிடாமல் அதன் மகத்துவத்தைப் போற்ற வழிகாட்டுகிறது வேதாத்திரியம்.

மனவளம் நோக்கி....
’’ஊருக்கு உழைத்திடல் யோகம்’’ இது பாரதி வாக்கு.ஊன் கலந்து ,உயிர் கலந்து ,எண்ணமும் செயலும் ஒன்றிப் பிணைந்து, பிறருக்குத் தீங்கு விளைவிக்காத எந்த நற்செயலில் தீவிரமாய் முனைந்தாலும் அதுயோகமே.யோகம் என்றால் அது யோகாசனங்கள் மட்டுமே என்றும்,உடற்பயிற்சி அல்லது அதனுடன் இணைந்த மூச்சுப் பயிற்சிகள் மட்டுமே என்றும் எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்குத் தன் கவிதையால் பின்வருமாறு விடை சொல்கிறார் மகரிஷி வேதாத்திரி அவர்கள்.‘’உடற்பயிற்சி மாத்திரமே யோகமல்ல உளப் பயிற்சி அற்புதங்கள் வேத பாடம் கடற்கரையில் மலைகாட்டில் உடல் வருத்தும் கடும் மூச்சுப் பயிற்சி மட்டும் யோகமல்ல படர்க்கையினால் மனம் அலையா விழிப்பில் நிற்கப் பண்படுத்தும் பயிற்சிகளாம் இவை பிறவித் தொடர் அறுக்கும் தூய வினை ஆற்றும் பண்பாம் துயர் களைந்து நிறைவளிக்கும் வாழ்வே யோகம்’’மகரிஷி அவர்கள் வடிவமைத்துக் கொடுத்திருக்கும் ‘எளிய முறைக் குண்டலினி யோக’ மும்(S K Y -Simplified kundalini yoga)மேற்குறித்த கருத்துக்களின் அடிப்படையில் -தனிமனித,சமூகத் துயர்களைக் களைவதால் விளையும் ஒரு நிறைவான வாழ்வை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதே.யோக மார்க்கம் என்பது தனிமனிதனின் ஆன்மாவைத் தூயமைப்படுத்துவதோடு நில்லாமல் அதன் வழி இந்தச் சமுதாயத்தையே உய்விப்பதாக அமைய வேண்டும் என்பதே மகரிஷிகளின் விருப்பம்.தான் நிறுவிய அமைப்புக்கு ‘உலக சமுதாய சேவா சங்கம்’என்ற பெயரை அவர் சூட்டியிருப்பது இக் காரணம் பற்றியதே.தனி மனிதனின் மனம்,மொழி,மெய் மூன்றும் தூய்மைப்பட்டால் அவன் அங்கம் வகிக்கும் சமூகமும் அவனால் நலமும்,வளமும் பெறும் என்பதாலேயே-மண் பயனுறத் தான் உருவாக்கிய யோகமுறைக்கு ,‘மன வளக் கலை’எனப் பெயரிட்டு மகிழ்ந்தார் மகரிஷி.‘’உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’’என்பது திருமூலரின் திருவாக்கு.‘உடம்பை வளர்த்தல்’என்பது வெறும் உணவால் அதை வளர்ப்பதை மட்டுமே குறிப்பிடவில்லை என்பதையும்,உயிரை வளர்க்கத் தகுதி கொண்டதாக அதை வளர்த்தெடுப்பதையே அத் தொடர் சுட்டுகிறது என்பதையும் இங்கே நினைவில் கொண்டாக வேண்டும்.’மனம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’ என்று தவித்துப் புலம்பியவன் பாரதி.அந்தத் தவிப்பு நம்மில் பலருக்கும் கூட உண்டு.உயிர்த் தேடலுக்குத் தகுந்தபடி உடலை உரமாக்க மனவளக்கலை அளிக்கும் முதல் பயிற்சி,எளிய முறை உடற்பயிற்சி.எட்டு வயதிலிருந்து எண்பது வயது வரையுள்ள அனைவருமே மிக எளிதாகப் பயிலக் கூடிய உடற்பயிற்சி முறைகள் அடங்கியது இது.இத்துடன்,உயிர்ச் சக்தியை மேம்படுத்தும் காயகல்பப் பயிற்சி,பலவகையான அகத் தவங்கள் அடங்கிய தியானப் பயிற்சி,தனிமனிதனின் பண்புகளைச் சீரமைக்கவும்,அவனைச் சமூகத்துக்கு நலம் சேர்ப்பவனாக மாற்றவும் உதவும் அகத்தாய்வுப் பயிற்சிகள்(introspection)இறைநிலைத் தத்துவத்தை உணர வழி காட்டும் பிரம்ம ஞானப் பயிற்சிஆகிய அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கி இருக்கும் அரும்பெரும் கலையே தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் நல்கியிருக்கும் அருட்கொடையான மனவளக்கலை.மனவளக்கலையின் மாண்பு பற்றிய கீழ்க்காணும் மகரிஷியின் பாடல்,அது குறித்த புரிதலை மேலும் மேம்படுத்தும்.....‘’வாழ்க்கைத் தத்துவம் எண்ணம் ஆராய்தல் ஆசை வளமாக்கிச் சீரமைத்துச் சினம் தவிர்த்துக் கவலை வாழ்க்கையிலே நிலவாமல் காத்து அறிவறியும் வழிகளெல்லாம் மன வளக் கலை பயிலக் கிட்டும். வாழ்க்கையிலே உடல் உள்ளச் சோர்வு போக்கி எந்த வயதினரும் காயகற்பக் கலை கற்றுத் தங்கள் வாழ்க்கையிலே வளம் பெற்றுத் தங்களுக்குப் பின்னால் வரும் பிறவிச் சந்ததிகள் வளம் பெறவும் காண்போம்’’
''நான் யார் ?’’
''நான் யார் ?’’- சாமானிய மனிதன் முதல்,சன்மார்க்க வழியில் கரை கண்ட ஞானி வரை அனைவரின் உள்ளத்திலும் அவ்வப்போதாவது தோன்றி மறையும் தவிர்க்க முடியாத கேள்வி இது.
’’நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்’’
என்பார் மணிவாசகர்.-திருக்கோத்தும்பி(திருவாசகம்)
நான் என்பது...உடலா...,மனமா...,உயிரா...,ஆன்மாவா....?இவை அனைத்தும் சேர்ந்த வேறொன்றா?நான் என் பெற்றோரிடமிருந்து வெளிப்பட்டிருந்தாலும்,அவ்வாறு என்னை வெளிப்படச் செய்த சக்தி எது?அது உறைவது எங்கே?அது ஆட்டுவிக்க நான் ஆடுவது எவ்வாறு?நான் இயங்கும் களமாகிய பிரபஞ்சம்..., இத்தனை செய் நேர்த்தியுடன்....,செம்மையுடன் கட்டமைக்கப்பட்டிருப்பதுதான் எப்படி?
‘’படர் வான் வெளியில் பலகோடி கோடி கோடிப் பல்கோடி இடறாதோடும் அண்டங்கள்....’’
என்ற பாரதியின் பாடல் வரிகளைப் போல்,அண்டத்தின் ஒவ்வொரு கோளும்,விண்மீனும் அதனதன் வட்டப் பாதையில் இடறாது ஓடும் அற்புதம் எவ்வாறு நேர்ந்தது?
கேள்விகள்.....கேள்விகள்....ஓயாத கேள்விகள்!இந்தக் கேள்விகளுக்கு விஞ்ஞானிகளும் விடை தேடினார்கள்;
இன்னும் தேடுகிறார்கள்.
மெய்ஞ்ஞானிகளும் விடை தேடினார்கள்;இன்னும் தேடுகிறார்கள்.
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அளப்பரிய அறிவியல் வளர்ச்சியை,மருத்துவ முன்னேற்றங்களை,தொழில்நுட்பத் தேர்ச்சிகளை,வாழ்க்கைத் தரத்தை....,வாழ்வியல் முறையை(lifestyle),மனோதத்துவ வளர்ச்சியைமனதில் செரித்துக் கொண்டு,மேற்குறித்த கேள்விகளுக்கு விடை காண முனைந்தார் வேதாத்திரிமகரிஷிகள்.
‘’ ‘நான் யார்’என்றறியும் பேரார்வத்தாலே நாட்கள் மாதம் ஆண்டு பலப் பல கழித்தேன் ஊனுருவில் உள்ளியங்கும் சூக்குமத்தை உயிராய் உணர்ந்தபின் உயிர்ச் சுழலின் அலைகாந்தம் கண்டேன்’’- ஞானப் பேழை(வேதாத்திரி மகரிஷி)
என்ற அவரது பாடல் இக் கேள்விக்கு விடைதேடி அவர் மேற்கொண்ட நெடும் பயணத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது.
தத்துவம்,உடற்கூற்றியல்,விண்வெளிவிஞ்ஞானம்,மனவியல்,சமூகவியல் என இன்றைய வாழ்வியலுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து,இறை நிலை என்ற ஒன்றை மறுக்காமல்....அதே வேளையில், அறிவியல் அடிப்படைகளோடு ஆதாரபூர்வமாக மேற்குறித்த அனைத்துக் கேள்விகளுக்கான விடைகளையும் உள்ளடக்கி அவர் உருவாக்கியுள்ள நன்னெறியே வேதாத்திரியமாக உருப் பெற்றுள்ளது.அதன் ஒவ்வொரு துளியையும் பருகப் பருக.....அந்த உண்மைகள் நமக்கு வெளிச்சமாகிக் கொண்டே வரும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)