சென்ற நூற்றாண்டில் பிறந்து , அடுத்து வரும் நூற்றாண்டுக்கான அறிவியலுடன் கூடிய ஆன்மீகச் சிந்தனைகளைத் தொலைநோக்குடன் வழங்கிவிட்டுப் போன பெருமகனார் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு ஆகஸ்டு 14ஆம் நாளில் தொடங்கியிருக்கிறது.
வாழ்க்கை நெறியே யோகம் என்பதே மகரிஷி வகுத்த சித்தாந்தம்..
தனி மனிதனை முன்னிறுத்தி அவனை மட்டுமே கரை சேர்க்கும் ஆன்மீகமல்ல வேதாத்திரியம்.
தனி மனிதனைச் செழுமைப்படுத்தி அதன் வழி மண் பயனுறச் செய்வதே அதன் இலக்கு.
’’தொழில்களையே கடமையெனத் தேர்ந்து செய்து
மாயமெனும் மறைபொருளாம் அறிவறிந்து
மண்ணுலகில் உயிர்கட்குத் துன்பம் நீக்க
நேயமுடன் தொண்டாற்றி இன்பம் துய்க்கும்
நிறை வாழ்வாம் நெறியதுவே யோகமாம்’’
என்ற மகரிஷியின் பாடல்
‘ஊருக்குழைத்திடல் யோகம்’என்ற மகாகவியின் வரிகளையே நினைவூட்டுகிறது.
வேதாத்திரியத்தின் யோக வழிகாட்டுதல்கள் படிப்பாளிகளுக்கும்,பணம் படைத்தவர்களுக்கும் மட்டுமானவை அல்ல.
‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’என்ற காந்தீயப் பாதையே வேதாத்திரியத்தின் பாதை.
அன்றாடங்காய்ச்சிகளுக்கும்,சமூக மட்டத்தில் மிகச் சாமானியமானவர்களெனக் கருதப்படுபவர்களுக்கும்,தவம்... தியானம் ஆகியவற்றில் புறக்கணிப்புக்கு ஆளாகி ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்ணினத்துக்கும் அதுநாள் வரை எட்ட முடியாத தொடுவானமாக இருந்த ‘யோக’த்தின் வாயில்களை அனைத்துத் தரப்பினருக்கும் விரியத் திறந்து வைத்திருப்பதே மகரிஷியின் எளிய முறைக் குண்டலினி யோக மன வளக்கலையின் தனிச் சிறப்பு.
.மதம்,மொழி,சாதி,இனம் ஆகிய குறுகிய எல்லைக் கோடுகளையும் , அவை உண்டாக்கி வைத்திருக்கும் புற அடையாளங்களையும் தகர்த்தபடி அறிவு ஒன்றையே தெய்வமாக்கி அறிவுக்காகவே திருக் கோயில் அமைத்து அறிவை மட்டுமே ஆராதிக்கிறது வேதாத்திரியம்.
வானியல்,புவியியல்,உடலியல் ஆகிய விஞ்ஞானக் கோட்பாடுகளை உள்வாங்கி அவற்றோடு முரண்படாத வகையில் தன் உள்ளுணர்வால்கண்டுணர்ந்த இறை உணர்வையும் ஒருங்கிணைத்துத் தெளிவான வாதங்களோடு முன் வைக்கும் வேதாத்திரி மகரிஷிகளை ஓர் இறை விஞ்ஞானி என்று குறிப்பிடுவது கூடப் பொருத்தமானதுதான்.
வேதங்கள் உபநிஷதங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கரை தேர்ந்த ஆன்மீக குருமார்கள் அவை குறித்த வியாக்கியானங்களையும்,விளக்கங் களையும்
தங்கள் சீடர்களுக்கு அளிப்பதே பொதுவான நடப்பியலில் காணக் கூடியது.
ஆனால்....மூன்றாம் வகுப்பைக் கூட முழுவதும் முடிக்க இயலாத வேதாத்திரி மகரிஷி அவர்கள் மேற்குறித்த அனைத்து வேத,உபநிடத சாரங்களையும் தனது உள்ளறிவின் வழிகாட்டுதலால் மட்டுமே தானாகவே கண்டடைந்திருக்கிறார் என்பதே மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.
வேதாத்திரி மகானின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களும்,அஞ்சல் தலை வெளியீடு ஆகியனவும் தமிழக முதல்வர் தலைமையில் நடந்து கொண்டிருந்த அதே வேளையில் - மகரிஷி தன் நேரடிப் பார்வையில் உருவாக்கிவிட்டுப் போயிருக்கும் உலக சமுதாய சேவைஅமைப்பின் தில்லி மண்டலக் கிளை உறுப்பினர்கள் மிக அமைதியான முறையில் சிறியதொரு விழா எடுத்து அப் பெருமகனை நினைவு கூர்ந்தனர்.
மகரிஷியின் அரிய புகைப்படங்கள் , உரைகள் ,வாழ்த்துக்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு திரையிடப்பட்டபோது காலச் சக்கரத்தில் ஏறி அவர் வாழ்ந்த காலத்திலேயே சற்று நேரம் சஞ்சரித்துவிட்டு வந்த உணர்வு பார்வையாளர்களுக்குள் கிளர்ந்தது.
ஆழியாறில் அம் மகானுடன் நெருங்கிப் பழகித் தற்போது தில்லி மண்டலத்தில் சேவையைத் தொடரும் மூத்த பேராசிரியர்கள் ,ஸ்வாமிஜி தொடர்பான அரிதான பல நிகழ்வுகளையும்,அவரது அன்றாடச் செயல்பாடுகளையும் மன நெகிழ்வோடு கூட்டத்தில் பகிர்ந்து கொண்டனர்.
மன வளக்கலை உறுப்பினர்களும் வேதாத்திரியக் கல்வித் திட்டத்தில் பாரதியார் பல்கலை மூலம் பயிலும் முதுகலை மாணவர்களும் வேதாத்திரியக் கல்வியால் விளைந்த நலன்களை அவரவர் வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையில் அவையில் முன் வைக்க
மகரிஷியின் உலக நல வாழ்த்துப் பாடலுடன் விழா இனிதே நிறைவுற்றது
